Rahul Gandhi becomes the Leader of the Opposition

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புமாறு மாநில காங்கிரஸ் தலைமைக்கு நேற்று இரவு உத்தரவிட்டது காங்கிரசின் அகில இந்திய தலைமை. அதனடிப்படையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி உடனடியாக அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது.இதன் பின்னணியில், தமிழகத்தின் கடலூர் காங்கிரஸ் எம்.பி.விஷ்ணு பிரசாத் இருக்கிறார் என்று காங்கிரஸில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Advertisment

இது குறித்து விசாரித்த போது, ‘கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 55 இடங்கள் கிடைத்தது. அதனால் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க குறைந்தபட்சம் 60 எம்.பி.க்கள் தேவை. அந்த எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பினை கடந்த 5 ஆண்டுகளில் இழந்திருந்தது காங்கிரஸ். எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாததால் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார் ராகுல். இதனால் அந்தப் பதவியில் மல்லிக்கார்ஜுன கார்கே அமர வைக்கப்பட்டார்.

Rahul Gandhi becomes the Leader of the Opposition

தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவிருக்கிறது. அதனால் இந்த முறை ராகுல்காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும், அதற்கேற்ப நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என டெல்லி சென்ற கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், காங்கிரசின் மூத்த தலைவர்களிடமும், எம்.பி.க்களிடமும் பேசியிருக்கிறார். மேலும் அவர், அழுத்தமாக வாதிடவும் செய்திருக்கிறார்.

Advertisment

இது காங்கிரஸ் தலைமையில் நேற்று பரவலாக விவாதிக்கப்பட்டது. அதேசமயம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையைத்தொடர்புகொண்டு, ‘நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றுங்கள்’ என்று விஷ்ணு பிரசாத் யோசனைத் தெரிவித்தார். இது குறித்து செல்வப்பெருந்தகை ஆலோசித்துக் கொண்டிருந்தபோதே, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு செல்வப்பெருந்தகைக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வந்தது. அதன் பேரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளது’ என்று பின்னணிகளைச் சுட்டிக்காட்டினார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.