இந்தியா மெல்ல மெல்ல டிஜிட்டல் இந்தியாவாக மாறத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் வடிவத்தில் வந்துவிட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவத்தில் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வாக்காளர் அடையாள அட்டையை, டிஜிட்டல் வடிவத்தில் வழங்குவது குறித்து, தேர்தல் களப்பணியாளர்கள், மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்போது வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்க, அதிக நேரம் பிடிக்கிறது. டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும்போது, நேரம் குறையும். மக்கள் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பற்றிய தெளிவான முடிவிற்கு, இந்திய தேர்தல் ஆணையம் வந்த பின், டிஜிட்டல் வாக்காளர் அட்டையை, மொபைல் போனில் வைத்து பயன்படுத்தலாமா அல்லது தனியாக தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டுமா போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.