ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கொச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது கடந்த 23-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி சுதான்ஷு தார்மிஷ்ரா திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கொச்சாரின் கணவர் தீபக் நடத்திவந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது. அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து சந்தா கொச்சார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில்தான் சந்தா கொச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது கடந்த 23-ம் தேதி அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது, மேலும் தொடர் சோதனையிலும் ஈடுபட்டது. தற்போது இந்த வழக்கை விசாரித்துவந்த சிபிஐ அதிகாரி சுதான்ஷு தார்மிஷ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு சிபிஐ கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம் குறித்து சிபிஐ தரப்பில், சுதான்ஷு தார்மிஷ்ரா இந்த வழக்கை மிகவும் தாமதாகவும், அதுமட்டுமின்றி சோதனை செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியில் கசியவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினாலும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.