தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட, அங்கு பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தது. இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
இதனிடையே, டெல்லியில் 1 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக பயிர்களை விவசாயிகள் எரிப்பதால், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணம் என்று வானிலை ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில், பயிர்க் காடுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு ரூ.10,000 அபராதமும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) சட்டத்தின் கீழ் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக ஒரு பகுதியாக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.