Skip to main content

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்