வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று (19.11.2021) அறிவித்தார். மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனவும் மோடி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தைத் திரும்பப் பெற முடியுமா?
இந்திய நாடாளுமன்றத்திற்கு ஒரு சட்டத்தை இயற்றும் அதிகாரம் இருப்பதுபோல, இயற்றப்பட்ட சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கும் அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 245, எந்தவொரு சட்டத்தையும் திரும்பப் பெறும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அதன்படி ஒரு சட்டத்தைத் திரும்பப் பெற, அதற்கான மசோதா கொண்டுவரப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்மூலமே சட்டத்தைத் திரும்பப் பெற இயலும். லோக்சபா முன்னாள் செக்கரட்டரி பிடிடி ஆச்சார்யா, மசோதா கொண்டுவருவதைத் தவிர சட்டங்களைத் திரும்பப் பெற வேறு வழியே இல்லை எனக் கூறியுள்ளார்.
இதன்படி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மசோதா ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன்மூலமே மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற முடியும். வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டால், அதுவும் ஒரு சட்டமாக மாறும் என சட்ட வல்லுநர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.