Skip to main content

“காங்கிரஸ் தலைவர்கள் வடக்கு, தெற்கு என நாட்டைப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்” - பா.ஜ.க எம்.பி. காட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

BJP MP says Congress leaders are starting to divide the country into North-South

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல்,  கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி இன்று (07-12-23) பொறுப்பேற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரேவந்த் ரெட்டி, ‘பீகார் டி.என்.ஏ.வைவிட தெலுங்கானா டி.என்.ஏ. சிறந்தது’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு அப்போது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத், ரேவந்த் ரெட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரவிசங்கர் பிரசாத், “நாட்டை பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் வினோத திட்டம் தீட்டி வருகின்றனர். நாட்டை, வடக்கு- தெற்கு என பிரிக்க தொடங்கிவிட்டனர். பீகாரின் டி.என்.ஏ.வைவிட எங்களுடைய டி.என்.ஏ சிறந்தது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். ஆனால், அது குறித்து சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ரேவந்த் ரெட்டியும் தனது கருத்தை திரும்பப் பெறவில்லை” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்