கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று (19/07/2019) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவின் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும் வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்கள், இரவு உணவை சட்டப்பேரவை வளாகத்தில் அருந்தி, அங்கேயே உறங்கினர். சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உறங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கிய நிலையில், ஆளுநர் உத்தரவை சபாநாயகர் ஏற்காததால், ஆளுநர் மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு அளித்துள்ளார்.
காலை 11 மணியளவில் சட்டசபை தொடங்கிய நிலையில் குமாரசாமி பேசிவருகிறார். அப்போது, “இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூராப்பாவுக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தவில்லை. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல எதிர்வரிசையில் அமர்ந்திருக்கிறார் எடியூரப்பா. தரம்சிங் ஆட்சியின் போது முதுகில் குத்துவது போல் நடைபெற்ற சம்பவங்களை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன” என்று காட்டமாக பேசிவருகிறார்.
ஆளுநர் கொடுத்த கெடு தாண்டியும் நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபையில் நடத்தப்படாமல் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா சட்டசபைக்குள் எலுமிச்சை பழத்தை எடுத்து வந்திருந்தார். பாஜக எம்.எல்.ஏ-க்கள் பலரும் அவர் சூனியம் செய்து வந்திருக்கிறார் என்று புகார் எழுப்பினார்கள். இதகுறித்து பேசிய குமாரசாமி, “ பாஜக ஹிந்து கலாச்சாரத்தை மதிப்பதாக சொல்கிறது. ரேவண்ணா காலையில் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து வந்துள்ளார். அதை சூனியம் என்று கேவலப்படுத்துகிறார்கள். சூனியத்தினால் ஒரு அரசு சூனியத்தின் மூலமாக ஒரு அரசை காப்பாற்ற முடியுமா என்ன?” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “நான் அனைத்து மாவட்டங்களுக்கும் சரியாக நிதியை தந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், பாஜகவினரோ நான் மூன்று மாவட்டங்களுக்கு மட்டும்தான் நிதியை கொடுப்பதாக புகாரளிக்கின்றனர். நான் அதை நிரூபிக்க வேண்டும் என்றால் பேசிதான் ஆகவேண்டும். இல்லையெனில் அது ஜனநாயகத்துக்கு விரோதகமாகிவிடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.