குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடியினத்தவர் (அல்லது) இஸ்லாமியர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 24- ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஜூலை 18- ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தவர் அல்லது இஸ்லாமியர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு பெயர் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. கேரள மாநில ஆளுநர் ஆரீஃப் முகம்மது கான், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், சத்தீஸ்கர் மாநில ஆளுநர் அனுசியா உய்கேய், கர்நாடகா மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளனர்.
இவர்களைத் தவிர, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங்கின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் ஆரீஃப் முகம்மது கான் துணை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.