டெல்லியில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் குழந்தைகள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், “பா.ஜ.க. தனது தவறுகளை மறைக்கப் பார்க்கிறது. பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்கள் பல்வேறு விதங்களில் அறிக்கை கொடுத்து தங்கள் தவறுகளை மறைக்கவே பார்க்கிறார்கள். ஆம் ஆத்மி அரசு பட்டாசு வெடிப்பதை தடுக்கத் தவறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
உங்களிடம் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா காவல்துறை உள்ளது. பட்டாசு வெடிப்பிற்கு உச்சநீதிமன்றத்தின் தடையும் உள்ளது. பிறகு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்தது யார்? பா.ஜ.க. தலைவர்கள் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க ஊக்குவிக்கின்றனர். அதன் காரணமாகவே டெல்லி காற்று மாசு அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று இருந்த காற்று மாசின் தரத்தைவிட இன்று மாசு அளவு அதிகரித்துள்ளது. தற்போதும் தனியார் வாகனங்கள் மீதான தடை தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.