'தேவேந்திர குல வேளாளர்' என்று அழைக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கலானது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தேவேந்திர குலத்தார், கடையர், குடும்பர், பள்ளர், காலாடி, பன்னாடி, வாதிரியார் உள்ளிட்ட ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்றழைக்க வழிவகை செய்யும் மசோதாவை, இன்று (13/02/2021) மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு தாக்கல்செய்த சட்டத்திருத்த மசோதா அடுத்தகட்ட அமர்வில் விவாதத்திற்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து, மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, பின்பு மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பின் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.
பின்னர், குடியரசுத்தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மசோதா சட்டமாக மாறும். அதைத் தொடர்ந்து, சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டு, சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்.
இந்த அரசமைப்பு சாசனச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.