மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 14ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, தர்ம்ராஜ் ராஜேஷ் காஷ்யப் மற்றும் குர்மைல் பல்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலைக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் குறிப்பிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான், ஒய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருக்கும் போது பாபா சித்திக் கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது, சிறையில் தொலைபேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலம், பூர்ணியா தொகுதி எம்.பி பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மற்றும் பிற நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாகக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். பீகார் எம்.பி பப்பு யாதவ் எழுதிய அந்த கடிதத்தில், ‘லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்களை செய்து வருகிறது. நான் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால் நான் அதை எதிர்த்தேன், அதைத் தொடர்ந்து லாரன்ஸ் கும்பலின் தலைவர் என்னைக் கொன்றுவிடுவதாக எனது மொபைலில் மிரட்டியுள்ளார்.
நான் அந்த உரையாடலின் நகலை இணைக்கிறேன். இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் இருந்தும் பீகார் உள்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது பாதுகாப்பை ஒய் பிரிவில் இருந்து இசட் பிரிவுக்கு அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நான் கொலை செய்யப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.