Skip to main content

வேளாண் சட்டங்கள் தொடர்பான நீதிமன்ற குழுவிலிருந்து பூபிந்தர் சிங் விலகல்

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

bhupinder singh mann quits supreme court panel

 

வேளாண் சட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து பூபிந்தர் சிங் விலகியுள்ளார். 

 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், இந்தச் சட்டங்களுக்கு எதிரான வழக்கு 12/01/2021 உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நான்கு பேர் கொண்ட அந்த குழுவில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் கன்வத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து பூபிந்தர் சிங் விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு விவசாயியாக , ஒரு யூனியன் தலைவராக, வேளாண் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாதவாறு எனக்கு வழங்கப்பட்ட பதவியைத் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இந்த குழுவிலிருந்து விலகுகிறேன்.  நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்