குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் வன்முறை காரணமாகவும், போலீசார் அடக்குமுறை காரணமாகவும் பொதுமக்கள் படுகாயமடைந்ததுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் புகார் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நேரில் சென்று இந்த புகாரை அளித்தனர். இந்த புகாரில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய அட்டூழியங்கள் குறித்தும், போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் முழுமையான விசாரணை தேவை என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.