நாடே நிபா எனும் உயிர்க்கொல்லி வைரஸைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் இந்த வைரஸினால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் அதன்மீதான அச்சம் வெகுவாக பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், வவ்வால்களோடு நீண்டகாலமாக வசிக்கும் சாந்தாபென்னோ அதைக் கண்டு கொஞ்சமும் பயமில்லை என்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ளது ராஜ்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் 74 வயது பாட்டிதான் சாந்தாபென் ப்ரஜாபதி. இளம்வயதிலேயே கணவரை இழந்த சாந்தாபென்னை சந்திக்க பிள்ளைகள் யாரும் வருவதில்லை. அதனால், தன் வீட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 500க்கும் மேலான எலிவால் வகை வவ்வால்களையே அவர் பிள்ளைகளாக கவனித்து வருகிறார்.
இந்த வகை வவ்வால்கள் இரவில் வேட்டையாடி விட்டு, பகலில் வீடுதிரும்பக் கூடியவை. அதனால், பகல் முழுதும் வீட்டில் இருக்கும் இந்த வவ்வால்கள் அதிகளவிலான எச்சங்களை வெளியிடுகின்றன. நாளொன்றுக்கு ஒரு வாளியளவுக்கு அவற்றை சுத்தம் செய்யும் சாந்தாபென், துர்நாற்றத்தில் இருந்து தடுக்க வேப்பிலை மற்றும் சாம்பிராணியைப் பயன்படுத்துகிறார்.
தற்போது நிபா வைரஸ் குறித்த அச்சம் பலரையும் விரட்டும் சூழலில், ஊரே ஒன்றுகூடி சாந்தாபென்னிடம் வவ்வால்களை விரட்டச்சொல்லி முறையிட்டும், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. என் வீட்டில் வளரும் வவ்வால்களை ரசாயனம் ஊற்றிக்கொல்ல முடியாது. அவற்றின் தலையெழுத்தை என்னால் தீர்மானிக்க முடியாது. அவை எப்போது இங்கிருந்து கிளம்பவேண்டும் என்பதை அவையே தீர்மானித்துக்கொள்ளட்டும் என உறுதியாக கூறியிருக்கிறார் இந்த வவ்வால் மனுஷி.