விவசாய நிலத்தில் அழகிப் போட்டிகளை நடத்தி இளைஞர்களின் கவனத்தை விவசாயத்தை நோக்கி ஈர்க்கவேண்டுமென கோவா விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.
கார்ப்பரேட்டுகளுக்கு கடன்களை அள்ளிக்கொடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்வது பற்றிக் கேட்டால் கப்சிப்பென வாயைப் பொத்திக்கொள்கிறது.
தலைமை காட்டும் வழியில் நடக்கும் கோவா பா.ஜ.க. அரசு மட்டுமென்ன தனி வழியிலா நடைபோட்டுவிடும்? கவர்ச்சிகரமாகப் பேசுவதில் குறைவைக்காதவர்கள் பா.ஜ.க.வினர். கோவா சட்டமன்றத்தில் விவசாய மானியக் கோரிக்கைகள் குறித்துப் பேசும்போது, “விவசாயத்தை கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நீங்கள் விரும்பினால் நெல் வயலில் அழகிப் போட்டி நடத்தலாம். அது இளைஞர்களை விவசாயத்தை நோக்கி ஈர்க்கும். இளம் தலைமுறையை விவசாயத்தை நோக்கி ஈர்க்க எதுவேண்டுமானாலும் செய்யலாம்” என்றார்.
சமீபத்தில்தான், “விவசாய நிலங்களில் வேத மந்திரங்களை ஓதினால் விளைச்சல் அதிகரிக்கும்” என்றார் சர்தேசாய். நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மானியம், கடன் தள்ளுபடி போன்ற எதையும் செய்யாவிட்டாலும் இதுபோல டிசைன் டிசைனாய் யோசனைகூற தயாராயிருக்கிருக்கிறார்கள்.