சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் சிவசேனா தலைவர் சஞ்சஞ் ராவத் அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். " ஒருநாள் ஊரடங்கு செய்வதால் எந்தப் பலனும் இல்லை, சீனாவைப் போல் சர்வாதிகாரமாகச் செயல்பட வேண்டும். மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.