Skip to main content

“டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான்” - அதிஷி

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
Atishi who was elected as the new Chief Minister, spoke about Arvind Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையாலும், சி.பி.ஐயாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பேரில், கடந்த 13ஆம் தேதி  திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மஹாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 

இதனையடுத்து, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று (17-09-24) ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததன் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் அதிஷி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “முதலில், டெல்லியின் முதல்வர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அழைப்பாளர் மற்றும் எனது குரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னிடம் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே செய்ய முடியும். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மட்டுமே முதல் முறையாக ஒரு அரசியல்வாதி ஒரு மாநிலத்தின் முதல்வராக வருவார். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் வேறு எந்த கட்சியிலும் இருந்திருந்தால், ஒருவேளை எனக்கு தேர்தல் சீட்டு கூட கொடுக்கப்பட்டிருக்காது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் என்னை நம்பி எம்.எல்.ஏ.வும், அமைச்சரும் ஆக்கி இன்று முதல்வர் பொறுப்பை கொடுத்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது நம்பிக்கை வைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், டெல்லி முதல்வரும் எனது மூத்த சகோதரருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வதால் எனக்கும் வருத்தமாக உள்ளது. அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் டெல்லியின் 2 கோடி மக்கள் சார்பாக, டெல்லியில் ஒரே ஒரு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று கூற விரும்புகிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்