அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்துள்ளார்.
கடந்த 1937ஆம் ஆண்டு அசாமில் காலணித்துவ ஆட்சிக்காலத்தின் போது, முஸ்லீம் லீக் அரசின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 2 மணி நேர இடைவேளை விடும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக பின்பிற்றப்பட்டு வந்த இந்த வழக்கம், தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் சபாநாயகர் பிஸ்வஜித் கூறுகையில், வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடுவதால், முக்கிய விவாதங்கள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆட்சியில், இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்கள் தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எங்கள் பேரவையின் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக அமர்ந்து இரண்டு மணி நேர இடைவெளி சரியில்லை என்று ஒருமனதாகத் தீர்மானித்தோம். இந்த இடைவேளை காலகட்டத்தில் நாம் இன்னும் உழைக்க வேண்டும். 1937ல் தொடங்கிய இந்த நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருமித்த முடிவு. இது தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல” என்று கூறினார்.