டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 47 தொகுதிகளுக்கு மார்ச் 27- ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தலும், 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6- ஆம் தேதி மூன்றாம் கட்டத்தேர்தலும் நடைபெறும். தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள், மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத் தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 'சி விஜில்' ஆப் மூலம் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.