Skip to main content

அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு; விசாரணை தேதி வெளியீடு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Arvind Jejriwal Appeal; Release of trial date

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் தரப்பில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி (15.04.2024) விசாரிக்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்