தற்போது வரை நீடிக்கும் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.
இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த கலவரம் தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கலவரங்களை கட்டுப்படுத்த டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலவரத்தினால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் ராணுவத்தை அனுப்பிவைக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.