புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், நாளை (01/04/2022) முதல் அதிகம் செலவழிக்க வேண்டியப் பொருட்கள் மற்றும் சேவைகள் எவை என்ற பட்டியல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள 850 மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் வலி நிவாரணிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை 10.7% அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் சுங்கக்கட்டணமும் உயர்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் ரூபாய் 5 முதல் ரூபாய் 55 வரை உயர்த்தப்படுகிறது.
வாகன தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம், பிற உலோகங்கள் கச்சாப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். டொயோட்டா கார் நிறுவனம் 4% வரையும், பிஎம்டபிள்யூ 3.5% வரையும் தங்களின் கார்களின் விலையை உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஹீரோ நிறுவனம் வரும் ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரிக்கணக்கு தாக்கலில் அளிக்கப்பட்டத் தகவல்களில் தவறு எதுவும் நேர்ந்திருந்தால், அதை இரண்டு ஆண்டுகளுக்குள் சரி செய்யும் வாய்ப்பும் புதிய நிதியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு தொகைக்கு மாநில அரசு ஊழியர்கள், குறிப்பிட்ட பிரிவில் வருமான வரிக்கழிவுப் பெரும் சலுகையும் அமலுக்கு வரவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தினால், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விதிக்கும் முறையும் அமலுக்கு வரவுள்ளது.
கிரிப்டோ கரன்சி வருவாய்க்கு வரி விதிக்கப்படும் என்ற நிதியமைச்சகத்தின் அறிவிப்பும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.