தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு முன்னதாக தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டில் குடியேறினார். அந்த வீட்டின் அருகில் ரூபாய் 5 கோடி செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றொரு புதிய கட்டிடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டிடம் கட்டும் போதே அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
கடந்த மாதம் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அம்மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் "பிரஜா வேதிகா" இல்லத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆந்திர அரசு ஏற்க மறுத்துவிட்டது.
"பிரஜா வேதிகா" கட்டிடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டிடத்தை இடிக்கும் இன்று பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதனால் வெளிநாட்டில் உள்ள சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்துள்ளார்.