ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநில நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முன்னாள் மாநில அமைச்சர்கள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்த இரண்டு மாதங்களுக்கு மேல் அரசாங்க பங்களாக்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு ரூபாய் 10,000 கட்டணத்தை மாநில அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தொடர்பான சட்ட மசோதாவை ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது.
இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, முன்னாள் அமைச்சர்கள் தங்கள் அரசு குடியிருப்புகளை காலி செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். இதற்கு முன்பு இரு மாதங்களுக்கு மேல் அரசு பங்களாவில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் மாத வாடகையாக ரூபாய் 5000 செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மசோதா சட்டமாக மாறும் போது, இதைத் தாண்டினால் அவர்கள் ரூபாய் 3 லட்சம் வரை கட்டணமாக செலுத்தும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.