ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மதுரவாடா பக்கண்ணா பாளையத்தைச் சேர்ந்தவர் பொதினா சாய்குமார் (23). இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் பெறுவதையும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, உள்ளூரிலும் தொலைதூர இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளுக்குச் செல்வார்.
இந்நிலையில், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்திலுள்ள ரவுலபாலம் பகுதியைச் சேர்ந்த ஷண்முக் தேஜா, பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணத்திற்காக பத்து நாள் போட்டோ ஷூட் நடத்த வேண்டுமென, ஆன்லைனில் சாய்குமாரிடம் ஆர்டர் செய்து போனில் பேசினார். இதனைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் ஷூட்டிங்கிற்கு தேவையான உபகரணங்களுடன் சாய்குமார் ரயிலில் விசாகப்பட்டினத்திலிருந்து ராஜமுந்திரி சென்றார்.
புறப்படுவதற்கு முன் தனது பெற்றோருக்கு போன் செய்து, ரவுலபாலத்தில் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறினார். ராஜமகேந்திரவரத்தில் ரயிலில் இறங்கிய சாய்குமாரை இரண்டு இளைஞர்கள் காரில் வந்து அழைத்துச் சென்றனர். ரவுலபாலம் அருகே இருவரும் சேர்ந்து சாய்குமாரைக் கொலை செய்து உடலைப் புதைத்துவிட்டு, கேமரா மற்றும் உபகரணங்களை எடுத்துச் சென்றனர்.
தான் கொலையாவதற்கு முன் சாய்குமார் ராஜமுந்திரியில் இறங்கியவுடன், ‘எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. தெரியாதவர்கள் அழைத்தவுடன் வந்துவிட்டேன். எனது போன் பயன்பாட்டில் இல்லாவிட்டால் ஆர்டர் கொடுத்து அழைத்துச் சென்ற ஷண்முக் தேஜா செல்போன் எண் மற்றும் தன்னை அழைத்துச் சென்ற காரைப் பின்னால் இருந்து எடுத்த போட்டோ விபரங்களை அனுப்பியிருக்கிறேன்’ என்ற தகவலைப் பெற்றோருக்கு அனுப்பினார்.
சாய்குமார் திருமண நிகழ்ச்சி என்று கூறிச் சென்றதால் பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மூன்று நாட்களாகியும் சாய்குமாரிடம் இருந்து போன் வரவில்லை. போன் வேறு ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்ததால், மகன் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாததால், விசாகப்பட்டினம் பி.எம்.பாலம் காவல்நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளித்தனர். சாய்குமார் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சாய்குமாரின் தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில், ஷண்முக் தேஜாவை அடையாளம் கண்டனர். அவருடைய செல்போன் எண்ணைக் கொண்டு கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அவருடைய செல்போன் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஷண்முக் தேஜாவின் முகநூல் பக்கத்தில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் இருப்பதைத் தெரிந்து கொண்ட காவல்துறையினர், அந்தப் பெண்ணின் முகநூல் ஐ.டி.யிலிருந்து சாட் செய்தனர். அதற்கு ஷண்முக் தேஜாவும் ரிப்ளை செய்ய, அவர் இருக்கும் இடத்தை ஐ.பி. எண் ஆதாரம் மூலம் கண்டறிந்து சென்ற காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்கு குறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ரவிசங்கர் பேசியபோது, “சாய்குமார் காணாமல் போனதாக கடந்த மாதம் 29 ஆம் தேதி புகார் வந்தது. அவரிடம் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள கேமராவுக்காக அவர் கொல்லப்பட்டுள்ளார். ஆலமூரில் சாய்குமார் உடல் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். இந்த வழக்கில் ஷண்முக் தேஜாவுக்கு அவருடைய நண்பரும் துணையாக இருந்துள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.