ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கு அருகே உள்ள ஜில்லா பரிஷத் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் பிரசாத். இவர், அதே பகுதியில் உள்ள சென்டர் பிளாசா அருகில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வெங்கட் பிரசாத் தன்னுடைய இளநீர் வியாபாரத்தை வழக்கம் போல் கவனித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளரான சின்ன ராவ் என்பவர் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த வெங்கட் பிரசாத்திடம் வியாபாரம் செய்ய பயன்படுத்தும் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு இளநீர் வியாபாரியான வெங்கட் பிரசாத் சரக்கு வாகனத்திற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என கூறி உள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சனையின் போது வெங்கட் பிரசாத்தை துணை ஆய்வாளர் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெங்கட் பிரசாத் பதிலுக்கு துணை ஆய்வாளரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் இளநீர் வெட்ட பயன்படுத்தும் அரிவாளை கொண்டு, துணை ஆய்வாளரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், நிலைகுலைந்து கீழே விழுந்தவரை தொடர்ந்து பலமுறை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காக்கிநாடா போலீசார், படுகாயமடைந்த துணை ஆய்வாளரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த வெங்கட் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.