மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது.
இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த ஒருவரைத் துப்பாக்கி ஏந்திய ஆய்த குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
அதே சமயம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர். முன்னதாக மணிப்பூர் முன்னாள் முதல்வர் கொய்ரேங் சிங் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இந்த இரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.