சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) - 2023 சட்டத்தின் படி192, 196(1)(a), 352, 353(2) ஆகிய 4 பிரிவிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 இன் கீழ் 92(a) என்ற பிரிவிலும் என மொத்தம் 5 பிரிவுகளில் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னை அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவைக் கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரின் முகநூல் பக்கம் கிறிஸ்துவர் பெயரில் இருப்பதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற முகநூல் பக்கம் ஆசிரியர் சங்கருடையது அல்ல. சென்னை அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியதை முகநூலில் தொடர்ந்து விமர்சித்து வந்த 'அந்தோணி பர்ணாந்து' என்ற நபர், மகா விஷ்ணுவைக் கண்டித்ததற்காக ஆசிரியர் சங்கரைப் பாராட்டி அவரது புகைப்படத்தை நேற்று (06.09.2024) தனது புரொஃபைல் படமாக மாற்றி இருக்கிறார். எனவே மத வெறுப்பைத் தூண்டாதீர். வதந்தியைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.