இந்தியாவில் 674 சிங்கங்கள் மட்டுமே உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29- ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2021- 2022- ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற விவாத நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, 2020- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 674 சிங்கங்கள் மட்டுமே உள்ளன. 2017- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 29,964 யானைகளும், 2018- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2,967 புலிகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.