மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழு மாதங்களுக்கு மேலாக அவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
விவசாயிகளும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத், "தினமும் 200 பேர் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்துவோம். அது அமைதியான போராட்டமாக இருக்கும். இன்று நடைபெறும் எங்களுடைய கூட்டத்தில் திட்டங்களை வகுப்போம்" எனக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு விவசாயிகள் பேருந்தில் செல்வார்கள் எனவும், அதற்கான கட்டணத்தை விவசாயச் சங்கங்கள் அளிக்கும் எனவும் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.