தென் இந்தியாவின் பிரபலமான உணவுகளில் ஒன்றான பரோட்டா, ரொட்டி வகையில் வராது என்பதாகக் கூறி, கர்நாடகாவில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான கர்நாடக அரசின் புதிய ஜிஎஸ்டி விதிமுறைகளில், எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்தெடுக்கப்படும் பரோட்டா, ரொட்டி வகையில் சேராது என்பதால், அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மனுவைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Authority for Advance Ruling அலுவலகம் அளித்துள்ள புதிய விளக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமை பரோட்டாக்கள் மற்றும் மலபார் பரோட்டாக்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது முழுமையாகச் சமைக்கப்பட்ட தயாரிப்புகள் என்பதால் சட்டவிதி 1905 -ன் கீழ் பரோட்டாவைக் கொண்டுவர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரொட்டி வகைகளுக்கு விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரியைப் பரோட்டாவிற்கு விதிக்கமுடியாது எனக் கூறியுள்ள அந்த அமைப்பு, பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது.
இந்நிலையில், பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் குரல்கள் எழுந்து வருகின்றன.