நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், பலியானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கே.கே.ரமேஷ், முத்தக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் அங்கு இணையத்தை முடக்கியது ஏற்புடையது. ஆனால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக அரசு தரப்பு பிற்பகல் 3 மணிக்கு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.