Skip to main content

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு யார் உத்தரவிட்டது? மனித உரிமை ஆணையம் போலீசாரிடம் சரமாரி கேள்வி!

Published on 04/06/2018 | Edited on 05/06/2018

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே-22 ஆம் தேதி மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் போது போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர்புகைவீச்சு, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டிலும் போலீசாரின் தடியடியாலும் காயம்பட்டவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதை தவிர வெளியே தெரியாமல் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுபவர்கள் உண்டு. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அதில் உயிரிழந்தவர்கள் உட்பட சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு செய்யுமாறும், அதன் பேரில் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜராஜன், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் சீனியர் எஸ்.பி.பபுல்தத்தா பிரசாத் அவரது தலைமையில் ஒய்வு பெற்ற டி.எஸ்.பி ராஜ்வீர் சிங் மற்றும் நீதின் குமார், அருண் தியாகி, லால் பகார் ஆகியோர் அடங்கிய குழுவை அனுப்பியது.

அந்த ஆணையித்தினர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்தனர். பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசியவர்கள் தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி.யான சைலேஷ் குமார் யாதவ், சரக டிஐஜி கபில் குமார் சராத்கர், எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் கூட்டத்தை கட்டடுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு யார் உத்தரவிட்டது? எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாருக்கு ஏதும் காயம் ஏற்பட்டதா? என அவர்களிடம் விசாரித்தனர்.

அதன் பின்னர், இந்த ஆணையம் இரண்டு குழுவாக பிரிந்து, ஒரு குழுவினர் மாநகராட்சியின் மண்டலமான மில்லர்புரத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். அதே சமயம் மருத்துவமனையில் காயம்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களிடம் அருண் தியாகி தரப்பு விசாரித்தது. அவர்களிடம் சம்பவங்கள் எப்படி நடந்தது என்று கேட்டறிந்தனர். இந்த குழுவினர் டெல்லியை சேர்ந்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள். ஆங்கிலமும் இந்தியும் மற்றுமே அறிந்தவர்கள். அதனால் தங்களின் விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்களும் பேசுவதை தெரிந்துக்கொள்ள ஒரு மொழிப்ப்பெயர்ப்பாளர் துணையுடன் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே ஆணையத்தின் முன்பு துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களான கார்த்திக், கந்தையா, சண்மூகம், தமிழரசன், ஜான்சிராணி, காளியப்பன், செல்வசேகர், ரஞ்சித் ஆகிய 8 பேர்களின் உறவினர்கள் ஆஜரானர். ஒருவர் தரப்பிற்கு அவரது உறவினர்கள் 3 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் இறந்தவர்கள் உங்களுக்கு எந்த வகையில் உறவினர். இதற்கு முன் போராட்டத்தில் கலந்துகொண்டாரா? இறந்தவர் போரட்டத்தின் போது தடியடி மூலமாக அல்லது துப்பாக்கியால் சூடப்பட்டு இறந்தார்களா? அவர் இறந்தது சம்பவ இடத்திலா? அல்லது சிகிச்சையின் போது மருத்துவமனையிலா? சம்பவத்தின் போது போலீசார் உங்களை மிரட்டினார்களா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்தவரா? அவர்களது உறவினரா? என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு பலியானவர்களின் தரப்பில் அவர்களது ஆதார் அட்டை, மற்றும் ரேஷன் கார்டு நகல்கள் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த கமிஷன் விசாரணை வரும் 6 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

இதனிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், இன்று மதியம் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் வந்தனர். அங்கிருந்து ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி போலீஸ் அதிகாரிகளான ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார். எஸ்.பி.முரளி ரம்பா, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த குழு ஒருவாரம் தூத்துக்குடியில் தங்கியிருந்து சம்பவ இடங்கள் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்த உள்ளது.

சார்ந்த செய்திகள்