நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதேபோல், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல அரசியல் தலைவர்ளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை.
தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை.
காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.