
'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்ப" தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.
ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டப் பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொலைபேசியில் ரஜினியைத் தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி, உங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி என்று பதில் நன்றி கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது.
மு.க.அழகிரி பாஜகவில் சேரப் போகிறார், புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார், கலைஞர் திமுகவும் உருவாகப் போகிறது என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த நிலையில், ''நான் கட்டாயம் பாஜகவில் சேர மாட்டேன், நான் கலைஞர் மகன்'' என சொல்லியிருந்தார். திமுகவின் துணை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கோபியின் தம்பி மருது இறந்ததை துக்கம் விசாரிக்க சென்ற அழகிரி செய்தியாளர்களிடம், ''என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. என்னோட தொண்டர்களிடம் ஆலோசனை செய்த பிறகே எதையும் சொல்வேன்'' என்று கூறிச்சென்ற நிலையில் தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.