இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ், புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஜெருசேலம் நகரை ஐ.நா நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.