Skip to main content

சந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்!!! அய்யாக்கண்ணு கவலை...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
ddd

 

 

இந்திய தலைநகா் டெல்லியில் வட மாநிலங்களை சோ்ந்த விவசாயிகள் மத்திய அரசு இயற்றிய புதிய விவசாய சட்டத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தொடா்ந்து தெரிவித்துவரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விவசாயிகளை டெல்லிக்கு செல்ல அனுமதிக்காமல் அவர்களை வீட்டு காவலில் வைத்து, போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காமல் இருக்கிறது. 

 

இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிடாமல் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனா். 

 

இந்த சட்டம் குறித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான அய்யாக்கண்ணு, ''முதலில் இந்த வேளாண்மை சட்டம் என்பது மத்திய அரசு இயற்ற அவா்களுக்கு அதிகாரம் இல்லை. இது அந்தந்த மாநிலங்கள் அரசுகளுடைய உரிமை. அதை மத்திய அரசு கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு நவம்பா் 7ஆம் தேதி புதிய வேளாண் சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்தின் முக்கியமான சாரம்சம் இந்தியாவில் உள்ள விவசாயிகளில் சொந்தமாக 1 ஏக்கா் நிலம் வைத்திருந்தாலும் சரி 100 ஏக்கா் நிலம் வைத்திருந்தாலும் சரி அவா்கள் அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டும். 

 

அந்த ஒப்பந்தத்தின்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே பயிரிட வேண்டும். அதில் கிடைக்கும் உற்பத்தியை அந்த கார்பரேட் நிறுவனமே வாங்கி கொள்ளும், ஒருவேளை பயிரிடப்பட்ட காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களால் பயிர்கள் சேதமடைந்து அழிந்தாலோ அதற்கான எந்த இழப்பீடையும் நிறுவனங்கள் ஏற்காது'' என தெரிவித்தார்.

 

மேலும். ''நிறுவனங்கள் பயிரிட வழங்கும் விதைகள் அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறிய அவா், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசானது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த எந்த முயற்சியையும் அவா்கள் எடுத்தது இல்லை. அதற்கு காரணம் நாம் இருவா் நமக்கு இருவா் என்பது, இன்று நாமே இருவா் நமக்கு ஏன் இன்னொருவா் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

அதற்கு காரணம் இந்த மரபணு மாற்று விதைகள் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவிற்குள் விவசாயத்தை பெருக்கினால் ஆண்கள் ஆண்மை இழந்து, பெண்கள் மலட்டு கா்ப்பத்தோடு இருப்பார்கள்'' என தெரிவித்தார். 

 

''இந்த சட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏமாற்றினாலும் அவா்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கோ, காவல்நிலையத்தில் புகாரே கொடுக்க முடியாது. அந்தந்த மாவட்ட ஆட்சியா் அல்லது வருவாய் துறை அதிகாரிகளிடம் மட்டுமே மனு கொடுக்க முடியும். 

 

உதராணத்திற்கு ஒரு விவசாயி அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களுடைய நெல் மூட்டைகளை கிலோ ரூ.19க்கு கொடுக்க முடியும். ஆனால் தனியார் கொள்முதல் நிறுவனங்கள் ரூ.17.80க்கு வாங்கி கொண்டு பணத்தை உடனடியாக கொடுக்காமல் காலதாமதமாய் கொடுக்கும் நிலையில் நெல்லின் தரம் சரியில்லை எனவே ரூ.15 தான் கொடுப்பேன் என்று அந்த நிறுவனங்கள் சொல்கிறது, இன்றும் இதே நிலை நீடிக்கிறது. 

 

கரும்பு ஒரு டன் விலை 2750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று அதற்கு வெட்டு கூலி ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். இதில் விவசாயி எந்த இடத்தில் லாபம் பெறுகிறான் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். 

 

நான் 20 ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தேன். பாரதிய கிஷான் சங்கத்தில் இருந்த நான் மோடியை முதல் தடவை சந்தித்தபோது 6 மாதங்களில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி விடுவேன் என்று கூறினார். 6 மாதங்களுக்கு பிறகு அவரை மீண்டும் சந்தித்தேன் சும்மா வந்து தொந்தரவு செய்யக்கூடாது எல்லாம் முறைபடி தான் நடக்கும் என்று கூறினார். அன்று வெளியே வந்து ஆரம்பித்தது தான் இந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம். 

 

1970ல் விவசாயி பொருட்களுக்கும், அரசாங்க பணியாளா்களுக்கும் ஒரே விலை, சம்பளம் இருந்தது. ஆனால் இன்று 2020ல் விவசாய பொருட்களின் விலை ஒரு டன் கரும்பு ரூ.2750, ஆனால் அரசு அதிகாரியின் சம்பளம் 1 லட்சத்திற்கும் மேல் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இன்று வரை உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு விலை என்பது கேள்விகுறி தான்? 

 

மன்கிபாத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி நாங்கள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் செய்து முடித்திருக்கிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார். அவா் விவசாய உற்பத்தி பொருளுக்கு என்னுடைய ஆட்சியில் நான்கு மடங்கு அதிக விலையை தருவேன் என்று தோ்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்று மத்திய அரசு 1 கிலோ நெல் 18.88 பைசா, இதற்கு முன்பு ரூ.14 இருந்தது, 4 மடங்கு உயரவில்லை ரூ.4 ரூபாய் உயா்ந்திருக்கிறது. 

 

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை ஒடுக்கும் சட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. விவசாய சட்டங்களை இயற்ற மத்திய அரசிற்கு உரிமை இல்லை. அது மாநில அரசு முடிவு செய்ய வேண்டியவை. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகளாகிய எங்களுடைய போராட்டம் தொடரும். கண்டிப்பாக மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகளின் குரல் ஒலிக்கும்.

 

ஒரு விவசாயிக்கு வீட்டிற்குள்ளும் மரியாதை இல்லை, நாட்டிற்குள்ளும் மரியாதை இல்லை. விவசாயிகள் இல்லை என்றால் நாளை கார்பரேட் நிறுவனம் கொடுக்கும் உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்படும். விவசாயிக்கு மாதம் 5 ஆயிரம் பென்சன் கேட்டால் மாதம் 500 ரூபாய் தருகிறார்கள். விவசாயிகள் அங்கீகரிக்கபடாத வரை காரப்பரேட் நிறுவனங்கள் பிடியில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சிக்கி தன்னுடைய ஆண்மையை இழந்து சந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்