Skip to main content

‘கோத்ரா கலவரத்தில் நடந்தது என்ன?’ - நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
PM Modi recalled What happened in the Godhra riots

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து நாட்டில் பிரபலமான நபர்களிடம் நேரடியாக உரையாடி வருகிறார். லட்சக்கணக்கில் ரசிகர்கள் கொண்ட அவரது நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில், தனது குழந்தை பருவம் முதல் அரசியல் பயணம் வரை தனது வாழ்க்கையின் நடந்த பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அதன்படி, குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் பற்றி பேசிய பிரதமர் மோடி, “2002 பிப்ரவரி 24 அன்று நான் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 27 அன்று, நான் முதல் முறையாக சட்டமன்றத்தில் கலந்து கொண்டேன். எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட 3 நாளில் கோத்ரா கலவரம் நடந்தது. கோத்ராவில் பதற்றம் அதிகரித்து வருவது பற்றிய செய்திகள் பரவத் தொடங்கின. இதில் ரயில்கள் தீவைக்கப்பட்ட செய்திகளும் அடங்கும். இந்த நிகழ்வுகளால் நான் மிகவும் கவலையடைந்தேன். கோத்ராவுக்குச் செல்ல வேண்டிய அவசரத் தேவை இருந்தது. 

நான் வதோதராவுக்குச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தேன். ஆனால், ஹெலிகாப்டர்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  ஓஎன்ஜிசியின் ஹெலிகாப்டர் ஒன்று இருந்தது, ஆனால் அது சிங்கிள் இன்ஜின் என்பதால் அதை விஐபிகள் பயன்படுத்த முடியாது என்று நெறிமுறைகளைக் கூறி மறுத்துவிட்டனர். என்னை ஒரு விஐபி போல நடத்த வேண்டாம், என்னை ஒரு சாமானியனாக நடத்துங்கள் என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. என்ன நடந்தாலும் அதற்கு தானே பொறுப்பேற்பேன் என்று கூறி அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோத்ராவை அடைந்தேன். 

அது வலிமிகுந்த காட்சி. அங்கு இறந்த உடல்களை நான் கண்டேன். ஆனால், நான் என் உணர்ச்சிகளுக்கு மேலாக உயரமான பதவியில் அமர்ந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தேன். ஒரே நாளில் ஐந்து இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. முதல்வராக இருந்த எனது நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். நான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால், எனது பாதுகாப்பு ஆபத்தானது என்று அதற்கு மறுத்துவிட்டனர். நான் போகிறேன் என்று வலியுறுத்தினேன். நான் காரில் அமர்ந்து முதலில் மருத்துவமனைக்கு சென்றேன். குண்டு வெடித்த மருத்துவமனைக்கும் செல்ல வற்புறுத்தினேன். என்னுள் பதற்றம், அமைதியின்மை இருந்தது என்று சொல்லலாம். ஆனால், எனது பணியில் முழுவதுமாக ஈடுபடுவதே எனது வழி, அது பொறுப்புணர்ச்சியை எடுத்துக்கொள்கிறது” என்று கூறினார்.  

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கரசேவகர்கள் பயணித்த எஸ் 6 பெட்டியில் திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது.  தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. அந்த வகையில் பஞ்ச மஹால் மாவட்டம் கலோல், டெலோல் மற்றும் டெரோல் நிலையம் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்