!['Orange Alert for 4 Southern Districts' - Meteorological Department Alert](http://image.nakkheeran.in/cdn/farfuture/1tiZji3qhtILxWLKIqNsW8HhjTDE1FEoKpTAfwgzeuU/1704784300/sites/default/files/inline-images/met-art_0.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (09.01.2924) மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (09.01.2024) கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் நாளை (10.01.2024) கனமழை பெய்யக்கூடும். இன்று 09.01.2024 முதல் 11.01.2024 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.