இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மோடி எதிர்ப்பு குறித்த ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தெரிந்தே மத்திய அரசு அதை அமைக்காமல் தாமதம் செய்வதாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னை திருவிடந்தையில் நடைபெற இருக்கும் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும், மோடி செல்லும் வழிகளிலும் கறுப்பு கொடி காட்டி அறவழியில் போராடவேண்டும் என அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் கறுப்பு கொடி, கறுப்பு பலூன், கறுப்பு உடை என பலவற்றை மோடி எதிர்ப்பின் அடையாளமாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், மோடி வருகைக்கு எதிரான ட்விட்டர் பதிவுகளில் #GoBackModi ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.