
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக கட்சியின் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''நேற்று மாலை பாஜகவினுடைய தமிழக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பேசினோம். மேலும் நாளைய தினம் வருகின்ற 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர், என்னை கலந்துகொள்ள வேண்டும் என என்னிடம் நேரில் அழைப்பு விடுத்தார்.
பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தமாகாவினுடைய கருத்துகளை முறையாக கேட்டு ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம் வலிமையான பாரதம் இதன் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள கட்சி என இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். சாதாரண மக்களின் எண்ணங்களையும் திமுக அரசு பிரதிபலிக்க தவறிவிட்டது. அதிமுக முடிவில் தலையிட விரும்பவில்லை. அவரவர் முடிவு, அவரவர் கொள்கை அடிப்படையில் அமைந்தது. ஒரே கருத்துள்ள கட்சிகள் மீண்டும் இணைந்தால் மக்கள் ஒன்றும் எதிர்க்க மாட்டார்கள். பல்வேறு மாநிலங்களுடைய ஆதரவைப் பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் நகரம் முதல் கிராமம் வரை மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது'' என்றார்.