திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மட்டுமல்லாது பஞ்சாப் மாநில அரசும், ஆளுநர் அதிகாரத்துடன் செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வைத்துள்ளார் எனத் தமிழக அரசு குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றத்தில் அடுக்கியுள்ளது.
இந்த வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், தற்போது தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆளுநர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். அவர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை எனத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் உடனடியாகச் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது போலவே தற்பொழுது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் நிறைவேற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக வரும் நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநர்கள் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் கவலையும் கண்டனமும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் விளக்கம் கேட்டுத் திருப்பி அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.