Skip to main content

சென்னை ஊரடங்கு - 24 மணி நேரத்தில் 7,909 வாகனங்கள் பறிமுதல் (படங்கள்)

Published on 21/06/2020 | Edited on 22/06/2020

 

படங்கள்: அசோக்குமார், ஸ்டாலின், குமரேஷ்


கரோனாவைத் தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதலமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

 

இந்த நிலையில் 20.06.2020 காலை 6 மணி முதல் 21.06.2020 காலை 6 மணி வரையில் விதி மீறல் தொடர்பாக மொத்தம் 7,909 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்ற 144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

 

சென்னை பெருநகரில் 20.06.2020 காலை 6 மணி முதல் 21.06.2020 காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 4,799 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4,066 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள் மற்றும் 90 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 4,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் போக்குவரத்துக் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 3,329 இருசக்கர வாகனங்கள், 119 ஆட்டோக்கள் மற்றும் 254 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 3,702 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

சட்டம் ஒழுங்கு போலீசார் போக்குவரத்து போலீசார் இணைந்து மொத்தம் 7,395 இருசக்கர வாகனங்கள், 168 ஆட்டோக்கள் மற்றும் 344 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 7,909 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்