
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அரசின் உயர்நிலை உயரிய நிர்வாக பணியிடங்களுக்கு நடத்தப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், மார்ச் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். யு.பி.எஸ்.சி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பம் குறித்த விவரங்களுக்கு https://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.