இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழித்தொழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ஒரு நாள் ரஷ்யா போல் உடையும் என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லெபனான் நாட்டின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “பிரிட்டனால் உருவாக்கப்பட்டது தான் அமெரிக்கா. நீண்ட காலத்திற்கு சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்காவால் இருக்க முடியாது. ரஷ்யாவைப் போல் ஒருநாள் உடையும். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும் ஒன்றாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை தாக்கக்கூடிய திறன் வடகொரியாவிடம் உள்ளது. எங்களுடைய அணியில் அவர்களும் ஒரு பகுதியாக உள்ளனர். அண்மையில் ஹமாஸ் அமைப்பினர் ரஷியாவிற்கு சென்றனர், அடுத்து சீனாவுக்கும் செல்லவுள்ளனர்” என்று கூறியுள்ளார்.