Skip to main content

ஆந்திராவில் கைதான 84 தமிழர்கள் தமிழகம் திரும்பினர்

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
anthira thamilars

 

தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு வருபவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வருபவர்களே என சந்தேக கண்கொண்டு நோக்குகிறது ஆந்திரா காவல்துறை. அந்த சந்தேகம் பிரபலமான திருப்பதி – திருமலை வெங்கடாஜலபதியை வணங்க போகிறவர்களையும், கூலி வேலைக்கு வருபவர்களை பிடித்து அடித்து உதைத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது. உண்மையில் செம்மரம் வெட்டவந்து சிக்கியவர்கள், அப்பாவிகள் என சுமார் 4 ஆயிரம் தமிழக கூலி மக்கள் ஆந்திராவின் திருப்பதி, சித்தூர், கடப்பா, அனந்தபூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 


இந்நிலையில் கடந்த மார்ச் 2ந்தேதி, திருப்பதியில் இருந்து கடப்பா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தார் பாய் போர்த்திக்கொண்டு ஒரு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அதனை ஆஞ்சநேயா சோதனை சாவடி அருகே நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் சந்து தலைமையிலான கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட போலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 84 கூலி தொழிலாளர்கள் தார் பாய்க்கு கீழே இருந்தனர். அவர்களை பிடித்த கடப்பா காவல்துறை, இவர்கள் செம்மரம் வெட்டவந்தவர்கள் எனச்சொல்லி கைது செய்தது. விசாரணையில் அதில் 50 பேர் வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள், 34 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள். அதில் இருவர் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இவர்களை திரட்டி அனுப்பியது ஜம்னாமத்தூரை சேர்ந்த ஜெயராமன், அண்ணாதுரை என வாக்குமூலம் தந்துள்ளனர்.

 


இந்த கைதுக்கு வடதமிழகத்தில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட சில கட்சிகள் ஆந்திரா காவல்துறையின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இதனால் கொஞ்சம் பின்வாங்கிய ஆந்திரா காவல்துறை, இவர்களை ரேணிகுண்டா தாசில்தார் முன் நிறுத்தி சொந்த ஜாமினில் அனுப்பிவிடுங்கள் என ஆந்திரா அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 84 தமிழர்களையும் சொந்த பிணையில் விடுவிக்க வாய்ப்பு என்றார் கடப்பா காவல்துறை எஸ்.பி ரவிசங்கர்.

 


கைதானவர்களிடமிருந்து கைரேகைகள் பதிவு செய்துக்கொண்ட கடப்பா போலிஸ், அவர்கள் மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லாததால் வேறு வழக்குகளில் கைது செய்யவில்லை. ரேணிகுண்டா தாசில்தாரும், மாஜிஸ்ட்ரேட் பதவி வகிப்பவருமான நரசிம்மநாயுடு முன் நிறுத்தப்பட்ட தமிழக கூலி மக்களிடம், இனி இங்கு வரக்கூடாது எனச்சொல்லி சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களை இன்று மார்ச் 3-ந்தேதி மதியம் 2 மணியளவில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சார்ந்த செய்திகள்