இரண்டும் இரண்டும் எவ்வளவுன்னு கேட்டாலே ஃபோனில் கால்குலேட்டரை ஓப்பன் செய்யும் நாம், எந்த சந்தேகம் வந்தாலும் முதலில் திறப்பது கூகுளைத்தான். கூகுளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அதன் பயன்பாட்டை ஏகத்துக்கு உயர்த்தியுள்ளது. எல்லா வகையான தகவல்களையும் மக்கள் கூகுளில் தேடும் நிலையில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவ்வாண்டில் அதிகம் தேடப்பட்டவை என்ன என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ல் இந்தியர்களால் அதிகமாக தேடப்பட்டவைகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது கூகுள். கூகுளின் புள்ளிவிவரப்படி 2021 -ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியவை என்ன என்பதை பார்ப்போம்.
கூகுளில் அதிகமாக தேடப்பட்டவை (பொதுவானவை)
இளந்தலைமுறை அதிகமாக இருக்கும் இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட் மோகம் கொஞ்சம் அதிகம் தான். அதிலும் ஐ.பி.எல். என்றால் சொல்லவே வேண்டாம். கரோனாவால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட்டது. ரொம்ப தொலைவில் தொடர் நடந்ததாலோ என்னவோ நம்ம ஆளுங்க கிரிக்கெட்டை அதிகமாக தேடிட்டாங்க போல. இதனால், இப்பட்டியலில் முதலிடத்தை ஐ.பி.எல். தொடர் பிடித்துக்கொண்டது. அதேபோல, மூன்றாவது இடத்தை டி20 உலக கோப்பை பிடித்தது. கோவிட் தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின் இப்பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக யூரோ கோப்பை கால்பந்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோபா அமெரிக்க தொடர் ஆகியவை முறையே நான்கு, ஐந்து மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் கோவிட் தடுப்பூசியும், ஏழாவது இடத்தில ஃப்ரீ ஃபயர் மொபைல் கேமும் இடம்பிடித்துள்ளன. இவை மட்டமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பற்றியும் இந்தியர்கள் அதிகளவில் தேடியுள்ளார். இதன் காரணமாக, இப்பட்டியலில் அவரது பெயர் ஒன்பதாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இப்படி சாதனை இளைஞரை பற்றி தேடியது போலவே சர்ச்சை இளைஞரான ஆர்யன் கானையும் 2021 -ல் மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளார். இதன் காரணமாக அவரும் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
எனக்கு அருகில் இருக்கும்...
2020 -ல் மரண பயத்தை காட்டிய கரோனா 2021 -ல் மெல்ல குறைந்துவிடும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்தபோது, மார்ச் மாதத்தில் பரவ தொடங்கியது அதன் இரண்டாவது அலை. புதிய திரிபுகள், அதிகரித்த பரவல் என மக்களை மீண்டும் ஆட்டுவித்தது கரோனா. இதன் காரணமாக இந்த ஆண்டு ‘எனக்கு அருகில்’ (Near Me) தேடல்கள் பெரும்பாலும் கரோனா தொற்று தொடர்பான சேவைகளைச் சுற்றியே இருந்தன. தடுப்பூசிகள், கோவிட் சோதனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எங்கு கிடைக்கும், கோவிட் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் CT ஸ்கேன்கள் ஆகியவை அதிகம் தேடப்பட்ட இடங்கள் பட்டியலில் முறையே 1,2,4,5,7 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இவற்றிற்கிடையே உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி குறித்த தேடல்கள் மூன்று மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. டிரைவிங் ஸ்கூல் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்...
2021ஆம் ஆண்டு இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா. இந்திய ராணுவத்தின் தரைப்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ரா, இதற்கு முன் பல போட்டிகளில் பற்பல பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் அவர் அடித்த தங்கம் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆவாரை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது எனலாம். பதக்கம் வென்ற நாளிலிருந்து இவரை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் செய்த இந்தியர்கள் இவரது சமூக வலைதள கணக்கையும் அதிகளவில் பின்தொடர துவங்கினர். இவருக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இருப்பவர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் வழக்கில் கைதான இவர் அதன் காரணமாக இவ்வாண்டு கூகுளிலும் அதிகம் தேடப்பட்டார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை நடிகை ஷெனாஸ் கில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், நடிகர் விக்கி கொளசல், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, சுஷில் குமார் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் பிடித்துள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட படங்கள்...
இந்தியர்களின் உணர்விலிருந்து என்றைக்குமே பிரிக்க முடியாத ஒரு விஷயம் என்றால் அது சினிமா தான். வீக்எண்ட் என்றாலும் சரி, விசேஷம் என்றாலும் சரி, நமக்கு முதலில் மனதில் உதிக்கும் பொழுதுபோக்கு சினிமா தான். இப்படிப்பட்ட சினிமா இவ்வாண்டில் திரையரங்குகளை கடந்து ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்றது எனலாம். 2021 -ல் கரோனா பரவலால் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், அதிக அளவிலான படங்கள் ஓடிடி -யிலும் வெளியானது. இப்படி வெளியான திரைப்படங்களில் மக்கள் அதிகம் தேடியது எந்த படம் என்பது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட தவறவில்லை. அதன்படி, சூர்யா நடித்த ஜெய் பீம் படம்தான் இந்த ஆண்டு மக்களால் அதிகம் தேடப்பட்ட படமாக இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஓடிடி -யில் ரிலீஸ் ஆகி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தே ஆகணுமே என ரசிகர்களை ஏங்கவைத்த ஒரு படமென்றே இதனை சொல்லலாம். இதேபட்டியலில் இன்னொரு தமிழ் படமும் உள்ளது. ஜெய் பீம் படத்துக்கு மாறாக தியேட்டரில் வெளியாகி ரசிகர்களால் விசில் பறக்க கொண்டாடி பார்க்கப்பட்ட மாஸ்டர் தான் அந்த படம். மாஸ்டர் இப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர ஷெர்ஷா, ராதே, பெல் பாட்டம், எடர்னல்ஸ் ஆகிய படங்கள் முறையே இரண்டு முதல் ஐந்தாவது இடங்கள் வரை பிடித்துள்ளன.
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்...
2020 ஆம் ஆண்டில் கரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீட்டிலேயே முடங்கியிருக்க, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் கூட தள்ளிவைக்கப்பட்டன. இதனால் 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல விளையாட்டு நிகழ்வுகள் 2021 -ல் நடந்தன. அதிலும் பல தொடர்களில் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் கடந்துதான் இவ்வாண்டு நடைபெற்ற பல தொடர்கள் விளையாட்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்தன. கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக், பராலிம்பிக் என பல போட்டிகள் இந்த ஆண்டில் வரிசையாக நடைபெற்றது. இதில் இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டது ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தான். இவற்றிற்கடுத்து, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்ச் ஓபன், லா லிகா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
என்னவா இருக்கும்...?
எதாவது ஒரு புது பெயரையோ, நிகழ்வையோ கேள்விப்படும்போது அதை பற்றி எப்படியாவது உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் மக்களிடையே அதிகம். அப்படி அவர்களின் கேள்வி ஆர்வத்திற்கு தீனி போடுவதில் முக்கிய பங்கு கூகுளுக்கு தான். அப்படி எந்த விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் கூகுளில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலில் கருப்பு பூஞ்சை முதலிடம் பிடிக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன.? என்ற கேள்வியே இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட கேள்வியாக உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களை, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது..? தலிபான் என்றால் என்ன..? ரெம்டெசிவிர் என்றால் என்ன..? ஸ்டெராய்டு என்றால் என்ன..? ஸ்க்விட் கேம் என்றால் என்ன..? போன்ற கேள்விகள் பிடித்துள்ளன.
அதிகம் தேடப்பட்ட செய்திகள்...
ஊடகம் என்பது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், செய்தித்தாள் படிக்கும் தலைமுறையும், தொலைக்காட்சிகளில் செய்தி பார்க்கும் தலைமுறையும் கூட ஏதேனும் ஒரு செய்தியின் சமீபத்திய அப்டேட்டை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் உடனடியாக செல்லும் இடம் கூகுள் தான். அப்படி மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் முதலிடத்தை பிடித்துள்ளது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். இதற்கடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தானை பற்றிய செய்திகள், மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகள் பிடிக்கின்றன. மேலும், ஊரடங்கு குறித்த செய்திகள், சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியது, விவசாய போராட்டம் ஆகியவையும் இப்பட்டியலின் டாப் 10 -ல் வருகின்றன.