சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகின்றன பெரிய-சிறிய அரசியல்கட்சிகள். அதற்காக தொண்டர்கள், நிர்வாகிகளைவிட தேர்தல் வல்லுநர்களை அதிகம் நம்புகின்றன கட்சிகள். அரசியல் வியூகம் வகுக்கும் வல்லுநர்களில் தேசிய அளவில் பிரசாந்த் கிஷோர், சுனில், ஜான்ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் மிக பிரபலமானவர்கள். ஒபாமா, மோடி, நிதீஷ், சந்திரபாபு நாயுடு, பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி எனப் பலரது வெற்றி வியூகங்களின் பின்னணியில் இருந்தது, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம். அதேசமயம், காங்கிரசுக்காக உத்தரபிரதேசத்தில் களமிறங்கிய பிரசாந்தின் வியூகமும் திட்டமிடல்களும் வெற்றியை தரவில்லை.
"எங்கள் நிறுவனம் சொன்னதுபோல மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி வென்றது பா.ஜ.க. ஆனால், பிரியங்காவை உ.பி. முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தாததால் நாங்கள் வகுத்தளித்த வியூகம் அங்கே தோற்றது' என்கிறது ஐ-பேக். பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமாக வெற்றி கொண்டிருக்கிறது பா.ஜ.க. இதே நிலை நீடித்தால் 2021-ல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தன்னை வீழ்த்திவிடும் என அச்சப்பட்டு, தேர்தல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒப்பந்தத்தின் பட்ஜெட் 1,500 கோடி என சொல்லப்படுகிறது. இதை மத்திய பா.ஜ.க. அரசு ரசிக்கவில்லை. அந்தத் தொகை, மார்ட்டின் லாட்டரி அதிபருடையது என ஸ்மெல் பண்ணி ரெய்டு நடத்தியது என்கின்றனர்.
மம்தாவைப் போல, 2021-ல் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக ஐ-பேக் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள அ.தி.மு.க. வும், கமலின் மக் கள் நீதி மய்யம் கட்சியும் பி.கே. வை அணுகியுள் ளன. ஆனால், எந்த கட்சிக்கும் பி.கே. ஒப்பு தல் தரவில்லை. முதல்வர் எடப்பாடியை சந்தித்த பி.கே., "தமிழகத்தின் அரசியல் சூழல் இரட்டைத் தலைமையையோ ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையத்தையோ ஏற்காது. அதனால் ஒற்றைத் தலைமைக்குள் கட்சியை கொண்டு வாருங்கள். அதன்பிறகு பிராஜெக்ட் பற்றி பேசலாம்'’ என எடுத்த எடுப்பிலேயே நெகட்டிவ்வாக தெரிவித்ததில் எடப்பாடி அப்செட்.!
இந்த நிலையில், 2016 தேர்தலில் பா.ம.க. அன்புமணிக்காக தேர்தல் வியூகம் வகுத்த ஜான் ஆரோக்கியசாமியை தற்போது கையிலெடுத் திருக்கிறார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நவீன பிரச்சார யுக்திகள், பிராண்டிங் வியூகங்கள், தேர்தல் முழக்கங்கள் என்பன ஜான் டீமின் முக்கிய கோட்பாடுகள். "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்பது 2016-ல் பா.ம.க.வை கவனிக்க வைத்தது. அதுவரை 3 சதவீதமாக இருந்த பா.ம.க.வின் வாக்கு வங்கியை 5 சதவீதமாக உயர்த்தி தமி ழகத்தில் 3-வது பெரிய கட்சி என்கிற இமேஜை பா.ம.க.வுக்கு உருவாக்கித் தந்தது ஜான் ஆரோக்கியசாமி டீம்.
தலைமை-தொண்டர்கள்-களப்பணி என்ற நிலையிலிருந்து மாற்றம் முன்னேற்றம் வியூகம் வகுப்பாளர்கள் என மாறிவிட்ட தற்போதைய தேர்தல் அரசியல் குறித்து ஜான் ஆரோக்கியசாமியிடம் பேசியபோது, ""அரசியல் கட்சிகள் தங்களின் களப்பணி மூலம் மக்களோடு நெருக்கமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. முன்பெல்லாம் தங்கள் கட்சியின் சாதனைகள், திட்டங்களை விளம்பரங்கள், பேட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால், தொழில்நுட்பங்கள் அதிகரித்துவிட்ட சூழலில் பிரச்சாரத்தின் தன்மைகளும் முறைகளும் மாறிவிட்டன. இந்தச் சூழலில்தான் பிராண்டிங் மார்க்கெட்டிங் உருவானது.
இத்தகைய அரசியல் மாற்றங்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாதான் முன்னோடி. இதனையடுத்து இதை கையிலெடுத் தவர் மோடி. அவரது பிம்பம் இப்படி இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டது. பொதுவாக, வாக்குகளின் எண்ணிக்கையை களப்பணி மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் உருவாக்கலாம். ஆனால், தலைவர்கள் மீதான தாக்கம் என்பது அப்படி அல்ல. நேர் எதிரானதாக இருக்கும்.
2014-லிருந்து தேர்தல் ஹியரிங் மெத்தேடே முற்றிலுமாக மாறிவிட்டது. அதாவது மோடி- அமித்ஷா இருவரும் எலெக்ஷனை எப்படி எதிர்கொள்வது? எப்படி ரன் பண்ணுவது ? என்கிற புதிய அணுகுமுறையை ஏற்படுத்தியதால் இன்றைக்கு எல்லா அரசியல் கட்சி தலைவர் களுமே அந்த கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். ஒரு சக்சஸ் மாடலை காட்டுகிறார் பி.கே.! அதன் மீது நம்பிக்கை வைக்கிறார் மோடி. ரிசல்ட் சாதகமாக வருகிறது. தோல்வி யடைந்திருந்தால் சீரியஸ் காட்டியிருக்கமாட்டார்கள். இன்றைய நவீன தொழில்நுட் பத்தில் அரசியல் சிக்கியிருப்ப தால் பிராண்டிங் மார்கெட்டுக்கு மவுசு அதிகரிக்கிறது.
அன்புமணிக்காக நாங்கள் வொர்க் பண்ணபோது, தேசிய அளவில்-சர்வதேச அமைப்பு களில் தெரிந்த மத்திய அமைச்ச ராக இருந்த அன்புமணியை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்குத் தெரிய வில்லை. 3 மாதங்களில் தெரிய வைத்தோம். 9 மாதங்களில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரண்டு மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளுக்கு மத்தியில் மூன்றாவது முதல்வர் வேட் பாளராக அன்புமணியை நிலைநிறுத்தினோம். இதற்காக கட்டமைக்கப்பட்ட வியூகங்கள் வலிமையானவை.
தேர்தல் முடிவுகளில் திராவிட கட்சிகளை அடுத்து மூன்றாவது கட்சியாக உருவெடுத்தது பா.ம.க. ஆக, பிராண்டிங் மார்க்கெட்டிங் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறைதான். பெரும் பாலும் வெற்றியைத் தந்திருக்கிறது. தலைவர்களை மக்கள் மனதில் நிலைநிறுத்த வியூகம் வகுப் பாளர்களால் முடியும். ஆனால் தலைவர்களை உருவாக்க முடியாது. தலைவர்களில் ஹரிசாண்டல் தலைவர்கள், வெர்ட்டிக்கல் தலைவர்கள் என இருவகை உண்டு. காந்தி, அண்ணா, கலைஞர் போன்றவர் மக்களின் மனதில் செங்குத்தாக ஊடுருவக்கூடிய வெர்ட் டிக்கல் தலைவர்கள். மோடி, அன்புமணி போன்றவர்கள் சூழலைத் தக்க வைத்து அதன் போக்கில் வெற்றி பெரும் ஹரிஸாண்டல் தலைவர்கள். வெர்டிக்கல் தலைவர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. அதனால், 2021-சட்டமன்றத் தேர்தல் எல்லா கட்சிகளுக்குமே மிகப்பெரிய சவால்தான். அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வியூகம் வகுப் பாளர்களை அணுகுகின்றன'' என்கிறார் அழுத்தமாக.
பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை விட்டு வெளியேறிய சுனிலை 2016 தேர்தலில் கையிலெடுத்தது தி.மு.க. ஸ்டாலினின் வெற்றிக்காக உழைத்த சுனிலின் வியூகம், ‘2016 தேர்தலில் தி.மு. க.வுக்கு 90 சீட்டுகளை பெற்றுத் தந்தது. பலமிக்க எதிர்க்கட்சியாகவும் உருவெடுத் தது தி.மு.க.. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தி.மு.க.வின் தேர்தல் வியூகம் வகுப்பாளராக இருந்து வருகிற சுனிலை கொத்திச் செல்ல வட இந்திய அரசியல் தலைவர்கள் முயற்சித்து வரு கின்றனர்.
தேர்தல் வியூகம் வகுப்பாளர்களின் பிடியில் அரசியல் சிக்கியுள்ள இந்த சூழலில், இது குறித்து அரசியல் விமர்சகர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, "முன்பு இருந்த தலைவர்கள் எல்லாம் மக்களின் உணர்வுகளைப்புரிந்து, அதிலிருந்து உருவாகி, கட்சியின் கொள்கை களுக்கேற்ப வியூகம் வகுத்து, அரசியலை மக்களுக்கான சேவையாக பார்த்தவர்கள். ஆனால், தற்போது அரசியல் என்பது வர்த்தகத்துக்கானது என மாறிவிட்டது. சேவை என்பது மறைந்து அரசியல் எமக்கு தொழில்; எங்களுடைய கட்சி ஒரு நிறுவனம் என்பதாக உருவாக்கி விட்டனர். அதனால்தான் தங்களின் வெற்றிக்காக வியூகம் அமைக்கும் ஆட்களை தேடிப்பிடிக்கின்றனர். தேசிய அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் வியூகம் வகுப்பாளர்கள் பிரபலமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் முக்கியமானவரான சுனில், 2016 தேர்தலில் தி.மு.க.வின் நூலிழை வித்தியாச தோல்விக்கும், 2019 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர். 2016 தேர்தலில் கலைஞரை முதல்வர் வேட்பாளராக சொல்லிக்கொண்டே ஸ்டாலினை ப்ரமோட் பண்ணினார். இது, கலைஞரின் தலைமையை பலகீனப்படுத்தியதும், ஜெயலலிதா எடுத்த பேக்கிங் கம்யூனிடி அரசியலை எதிர்கொள்ள தி.மு.க. தடுமாறியதும்தான் அந்த தேர்தலில் தோல்வியை தந்தது. அதே சுனில்தான், வலிமையான பா.ம.க. எடப்பாடியுடன் சேர்வதால் தி.மு.க.வுக்கு நட்டமில்லை என சொல்லி வகுத்த வியூகம் 2019-ல் வெற்றியைத் தந்தது. ஆக, சந்தர்ப்ப சூழல்களுக்கேற்பதான் வெற்றி- தோல்வி அமைகிறது. எனவே தேர்தலில் வியூகம் வகுப்பாளர்களின் பங்களிப்பு குறைந்த சதவீதம்தான்'' என்கிறார் அழுத்தமாக.