விழுப்புரம் அருகே செஞ்சிசாலையில் ஜெயேந்திரா பள்ளி உள்ளது. இதனருகில் கடந்த 17-ம்தேதி அபிராமி என்கிற திருநங்கை கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் திடீர் திருப்பமாக, நண்பர்களே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அபி என்கிற அபிராமி 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வந்து அய்யங்கோவில்பட்டு பகுதியில் திருநங்கைகளோடு தங்கினார். பின்னர் புனிதா என்ற திருநங்கையின் சகோதரர் தங்கதுரையை திருமணம் செய்துகொண்டு, அவரிடமிருந்து நிறைய பணம்பெற்று விருத்தாசலத்தில் இரண்டுமாடி வீடு கட்டியிருக்கிறார். இதனால், புனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அபிராமி மீது கோபத்தில் இருந்தனர்.
அதேபோல், மதுமதி, சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் ஆகியோரின் வீடுகளில் வேலைக்கு செல்ல மறுத்தும், அப்பகுதியின் தலைவி போல் இருந்ததாலும் அபிராமி மீது அவர்களும் கோபத்தில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிராமியைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி, பாலியல் தொழிலுக்காக சென்ற புனிதா, கயல்விழி, மதுமிதா ஆகியோர் தங்களுடன் வந்திருந்த அபிராமியின் முடியைப் பிடித்து இழுத்து நிலைகுலையச் செய்தனர். அப்போது, மறைந் திருந்த வீரபாண்டியன், சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் அபிராமியின் தலையில் இரும்புக்கம்பியால் தாக்கி கொலைசெய்துவிட்டு, பின்னர் நாடகமாடியது அம்பலமானது''’என்று விவரித்தார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் லட்சக்கணக்கான திருநங்கைகள் வருகின்றனர். அவர்களில் பலர் விழுப்புரத்திலேயே நிரந்தரமாக தங்குகின்றனர். அவர்களுக்காகவே அய்யங்கோவில்பட்டு பகுதியில் வீடுகள் கட்டி, ரேஷன் அட்டை வழங்கியுள்ளது அரசு. இதன்மூலம், பல திருநங்கைகள் அருகாமை கடைகளிலும், சுயமாக தொழில் செய்தும் கவுரமாக வாழ்கின்றனர். இருந்தும் பல திருநங்கைகள் இரவுநேரங்களில் சாலையோரத்தில் நின்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற சூழலில்தான் அபிராமி கொல்லப்பட்டார். இதையடுத்து, எஸ்.பி. ஜெயக்குமாரின் ஆலோசனையின்படி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் ரேவதி, நகரில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளை அழைத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினார்.
அதில், "திருநங்கைகள் சுயதொழில் செய்யலாம். வணிக நிறுவனங்களில் வேலைசெய்து கவுரமாக வாழலாம். அதைவிடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது சமூகத்துக்கும், உயிருக்குமே ஆபத்தை விளைவிக்கிறது. உயிர்தான் முக்கியம். இந்த அறிவுறுத்தலையும் மீறி பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்கு பதிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அறிவுரை வழங்கி அனுப்பினார் ஆய்வாளர் ரேவதி. தவறு செய்யும் திருநங்கைகள் தங்கள் உயிரின் மேன்மையை உணர்ந்து திருந்துவார்களா?